ஹம்துன் அஷ்ரப்

19 பிப்., 2011

கடலூர் அருகே மாசிமக ஊர்வலத்தில் மோதல், ஒருவர் இறந்தார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 19, 2011 No comments


 கடலூர் அருகே ஊர்வலத்தில் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் இறந்தார். பலர் படுகாயமடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். 
கடலூர் அருகே உள்ளது கம்பிளிமேடு காலனி. அதன் அருகே உள்ளது தியாகவல்லி. இரு கிராமத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை மாசிமகத்தை முன்னிட்டு, கம்பிளிமேடு காலனியிலிருந்து இளைஞர்கள் ஆடிப் பாடி சுவாமியை தீர்த்தவாரிக்காக, பெரியக்குப்பம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.


திருச்சோபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களைத் தாக்கினர். இதனால், கிராமத்தினர் ஆத்திரமடைந்தனர். மாலை 5 மணிக்கு பெரியகுப்பம் கடற்கரையிலிருந்து சுவாமியுடன் திரும்பி வந்த கம்பிளிமேடு காலனி தரப்பினரை, தியாகவல்லி கிராமத்தினர் வழிமறித்துத் தாக்கினர். இருதரப்பினரும் தடி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இருதரப்பிலும் பலர் படுகாயமடைந்தனர். கம்பிளிமேடு காலனி தரப்பினர் திருச்சோபுரத்தில் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். திருசங்கு என்பவரின் கூரை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு அதிரடிப் படையுடன் விரைந்து வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வன்முறை கும்பலை தடியடி நடத்தி கலைக்க முயன்றார். இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபடவே போலீசார், கண்ணீர் புகைகுண்டு வீசி கும்பலை கலைத்தனர்.இதற்கிடையே, கம்பிளிமேடு காலனியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய தியாகவல்லி கிராமத்தினரை கைது செய்யக் கோரி, மோதலில் படுகாயமடைந்த அமாவாசை மகன் சுப்ரமணி (30), சத்தியசீலன், செல்வம், ராஜலிங்கம் உள்ளிட்ட 10 பேரை ரோட்டில் படுக்க வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதில், பஸ் டிரைவர் படுகாயமடைந்தார். மறியலில் ஈடுபட்ட கம்பிளிமேடு காலனி தரப்பினரை ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர், மோதலில் காயமடைந்தவர்களை, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்ரமணி (30) சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு மோதலில் ஒருவர் கொலையானதையொட்டி பதட்டம் நிலவி வருவதால், கம்பிளிமேடு மற்றும் தியாகவல்லி, திருச்சோபுரம் கிராமங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்: