ஹம்துன் அஷ்ரப்

7 ஜூலை, 2012

100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அப் பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி பயிலும் வயதிலுள்ள அனைத்து குழந்தைகளும் இடையில் நில்லாமல் கல்வி கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், மாணவ-மாணவியர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில வழிவகை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்கெனவே சென்ற ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் என மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
 
அந்த வகையில் இந்த ஆண்டிலும் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 900 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
 
அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் கல்வி பயில வழி ஏற்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: