பிரம்மாண்டமான கோலியாத்தை சிறுவன் டேவிட் வீழ்த்திய கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமகால இந்தியாவில் மிருகபலத்துடன் அதிகாரத்திலிருக்கும் ரத்தவெறி பிடித்த கோலியாத்து ஒருவனின் முகத்தில் டேவிட் ஒருவர் காறித்துப்பிய சம்பவம் கடந்த வாரங்களில் அரங்கேறியுள்ளது. குஜராத் முதல்வர் நரவேட்டை புகழ் மோடி முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த இனவழிப்புக் கலவரத்தின் சூத்திரதாரி நரேந்திர மோடி தான் என்றும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ‘இந்துக்கள்’ தொடுக்கப் போகும் தாக்குதல்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று மோடியே குறிப்பிட்டார் என்றும் சஞ்சீவ் பட் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்புப் புலணாய்வுத் துறையின் முன் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வாக்குமூலங்களின் விவரங்கள் கடந்த மார்ச் மாதம் தெகல்கா பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
மோடி சமீப காலங்களாக அகில இந்திய ரேஞ்சுக்கு கனவு கண்டு வருகிறார். இதற்காகவே ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருக்கி பலவண்ணங்களில் இமேஜ் பலூன்களைப் பறக்க விட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் அந்த பலூன்களில் ஊசியால் பொத்தலிட்டு விட்டது. சண்டையை மறப்போம், வளர்ச்சியைப் பற்றியும் அதற்குத் தேவையான ‘அமைதியைப்’ பற்றியும் மட்டுமே இனி பேசுவோம் என்று மிகச் சுலபமாக ஆயிரக்கணக்கான முசுலீம் பிணங்களைத் தாண்டிச் சென்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் ஆப்பறைந்தது. அமுக்கி விடலாம் என்று கணக்குப் போட்ட ரத்த வேட்டையை மீண்டும் விவாதத்திற்கு இழுத்து வந்தார் சஞ்சீவ் பட் – 2002-ல் செத்துப் போன பிணங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
இந்தப் பின்னணியில், தனக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் பட்டை ஒழித்துக் கட்ட, அவர் மேலிருந்த பழைய வழக்குகளை தூசி தட்டி எடுக்கிறார் மோடி. கே.டி பன்ந்த் என்கிற போலீசு கான்ஸ்டபிள், முன்பு குஜராத் கலவரம் தொடர்பாக சஞ்சீவ் பட் விசாரணைக் குழுவின் முன் சமர்பித்த அறிக்கை தவறானதென்றும், தன்னை மேற்படி அறிக்கையில் சாட்சிக் கையெழுத்திட நிர்பந்தித்ததோடு முறைகேடாகத் தடுத்து வைத்தார் என்றும் சஞ்சீவ் பட் மேல் குற்றம் சுமத்துகிறார். முன்னுக்குப்பின் முரணாகவும் நாடகத்தனமாகவும் அமைந்த கே.டி பன்ந்தின் புகாரைக் கையிலெடுக்கும் காவல்துறை, போர்ஜரி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சஞ்சீவ் பட் மேல் முதல் தகவலறிக்கையைப் பதிகிறது.
இதனடிப்படையில் கடந்த மாதம் 30-ம் தேதி சஞ்சீவ் பட் கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனை என்கிற பெயரில் சலித்தெடுக்கும் போலீசு, குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடியுள்ளனர். எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட்டை மிரட்டி பீதியூட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுத்து ‘விசாரிக்க’ போலீசு முயன்று வருகிற நிலையில், சஞ்சீவ் பட் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சஞ்சீவ் கைது செய்யப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் எளிதில் பிணை கிடைக்கக் கூடிய பிரிவுகள் தான் என்றாலும், அவரை போலீசு காவலில் எடுத்து சித்திரவதை செய்து பணிய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், பிரபலமான வழக்கறிஞர்களை இறக்கியுள்ள குஜராத் அரசு, பிணை வழங்குவதை எதிர்த்து வாதாடி வருகிறது.
இதற்கிடையே நீதி மன்றத்துக்கு வெளியே மனித உரிமை அமைப்புகள் சஞ்சீவின் விவகாரத்தைக் கையிலெடுத்து போராடிக் கொண்டிருக்கின்றன. அறிவுத்துறையைச் சேர்ந்த பலரும் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்டித்து வருகிறார்கள். உடனடியாக சஞ்சீவ் பட்டை போலீசு கையில் ஒப்படைத்தால் ஓரளவு கிழிசல்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் யோக்கியவான் முகத்திரையும் ஒட்டுமொத்தமாக அவிழ்ந்து விடும் என்று தயங்கும் நீதி மன்றம், பிணை வழங்குவது அல்லது போலீசு காவலுக்கு அனுப்பது தொடர்பான தனது முடிவை தொடர்ந்து ஒத்தி வைத்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சீவிடம், மூன்று மணிநேரங்களாவது போலீசு காவலுக்கும் ‘விசாரணைகளுக்கும்’ சம்மதித்தால், இன்றே பிணை வழங்குவதாக செஷன்ஸ் நீதிபதி ஜி.என் பட்டேல் பேரம் பேசியுள்ளார். அதே இடத்தில் நீதிபதிக்குப் பதிலளித்த சஞ்சீவ், “பொறுக்கிகளோடும் கிரிமினல்களோடும் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது அறம் சார்ந்த போராட்டம். எனது ஜாமீன் கோரிக்கை மனுவின் மேல் நியாயமாக நீங்கள் அளிக்கும் சட்டப்பூர்வமான உத்தரவு என்னவோ அதற்குக் கட்டுப்படுகிறேன். ஏழு நாட்களல்ல பதினான்கு நாட்கள் கூட போலீசு காவலில் இருக்க எனக்குச் சம்மதமே.” என்று முழங்கியுள்ளார். நீதிபதி தனது முகத்தில் விழுந்த எச்சிலை துடைத்தாரா என்பது தெரியவில்லை.
தங்கள் நோக்கத்திற்காக கொலை செய்யவும் தயங்காதவர்கள் என்பதை இந்துத்துவ பயங்கரவாதிகள், வரலாற்றில் எண்ணற்ற முறை பதிவு செய்தவர்கள் தான். தன்னோடு முரண்படுவது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் அது ஒரு முன்னாள் அமைச்சராகவே இருந்தாலும் கொல்லத் துணியாதவர் மோடி என்பதை ஹிரேன் பாண்டியாவின் கொலைச் சம்பவத்தில் நாடே பார்த்தது. இப்போது சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுக்கத் துடிப்பதும் கூட அவரை சித்திரவதைகளுக்குள்ளாக்கி மௌனமாக்கத் தான் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். இதையும் கடந்து சஞ்சீவின் மேல் பாய்ந்து குதறத்துடிக்கும் மோடிக்கு அதற்கான வேறு காரணங்களும் இருக்கின்றன.
தற்போது சஞ்சீவின் பிணை மனுவை எதிர்த்து அரசின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள கே.வி ராஜு என்கிற அதே வக்கீல் தான் ஹிரேன் பாண்டியா கொலை வழக்கில் அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா சார்பிலும் ஆஜராகிறார். ஏற்கனவே சஞ்சீவ் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஹிரேன் பாண்டியாவும் பங்கேற்றார் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்த விவரங்களையே, 2002-ம் ஆண்டு மே 13ம் தேதி கலவரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஹிரேன் பாண்டியாவும் வாக்குமூலமாக அளித்திருந்தார். அதில் இந்துக்களின் தாக்குதலை போலீசு கண்டு கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளிடம் மோடி வாய்மொழி உத்தரவிட்டதைக் குறிப்பிட்டிருந்தார். இந்த உண்மையை வெளியிட்ட சில நாட்களிலேயே ஹிரேன் பாண்டியா இந்துத்துவ குண்டர்களால் கொல்லப்பட்டார்.
தற்போது, சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தையே சர்ச்சைக்குள்ளாக்கும் விதமாக பொய்க்கேசு போட்டிருக்கும் மோடி, இதற்காக ராஜுவைக் களமிறக்கியிருப்பதன் மூலம் ஹிரேன் பாண்டியா வழக்கை சிதைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார்.
அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே. ஆயிரக்கணக்கான மக்களை தெருநாய்களைக் கொல்வது போல் கொன்று குவித்து விட்டு, அந்தப் பிணங்களின் மேல் வெற்றி ஊர்வலம் நடத்தத் துடிக்கும் மோடியை தனியாளாக எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட் அதிகார வர்க்கம் கண்டிராத அபூர்வமான மனிதர். அவரது போராட்டத்தை ஆதரிப்பு நமது கடமை..
தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு
- http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne190211EXPLOSIVE.asp
- http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne120211coverstory2.asp
- http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne120211coverstory.asp
- http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws220411GUJARAT_RIOTS.asp