ஹம்துன் அஷ்ரப்

25 ஜூன், 2012

இணைந்த கரங்கள்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


வரலாற்றுச் சிறப்புமிக்க பரங்கிப்பேட்டையின் வரலாற்றுக் குறிப்பில் இடம்பிடித்த 'இந்நாள் பொன்னாள்'என்ற வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை (22 ஜூன் 2012) அமைந்தது என்றால் மிகையில்லை. ஆம், அன்றுதான் நமதூரின் இக்கால ஆளுமைகளான மதிப்பிற்குரிய ஜமாஅத் தலைவர் டாக்டர். நூர் முஹம்மது அவர்களும், ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய முஹம்மது யூனூஸ் அவர்களும் தமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, அல்லாஹ்விற்காக, சமுதாய நலனையும்,  ஐக்கிய ஜமாஅத்தின் கட்டுமான நலனையும் கருதி ஒன்றுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்
 
ஊர்நலனே பிரதானம் என்று கருத்துவேறுபாடுகளைக் களைந்து விட்ட இந்தத் தலைவர்களைச் சந்தித்து,  ஒற்றுமைக்கு வழிகோலிய ஒருவர் கூறுகையில், "தொடக்கத்தில் பெரிதும் யோசனையாக இருந்தாலும், அல்லாஹ் இத்தகைய முயற்சிகளை வழிநடத்தவும் வெற்றியளிக்கவும் வல்லவன் என்கிற உறுதியான நம்பிக்கையில் இரு தலைவர்களையும் சந்தித்தோம். அல்ஹம்துலில்லாஹ், எதிர்பார்த்தவற்றுக்கும் மேலாக இரு தலைவர்களுமே தத்தம் தான்மை(Ego) கருதாது, ஊர் நலனை முன்னிறுத்தி நல்லிணக்கம் காண்பதில் காட்டிய ஆர்வமே இதில் மிகவும் உற்சாகமளித்தது" என்றார் கண்கள் பனிக்க. "இருவருமே ஒருவருக்கொருவர் மதிப்பு வைத்திருந்தார்கள்; தம் நலனைக் காட்டிலும் ஊர் நலமே உயர்ந்தது என்பதை உணர்ந்திருந்தார்கள், முகமலர்ந்து முயற்சிகளுக்கு முன்னுரிமையும் முற்போக்கும் காண்பித்தார்கள். ஆகவே அல்லாஹ்வின் அருளால் எல்லாமே எளிதாயிற்று".
 
ஆம். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
 
இந்த நல்லிணக்க முயற்சியில் பெயர் குறிப்பிடப்பட்டோர் மட்டுமின்றி மேலும் சில நல்லெண்ணச் சகோதரர்களும் தங்களின் சிறப்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் எடுத்து வைத்தார்கள். அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.
 
அதே சமயம் ஊரே எதிர்பார்த்த நல்லிணக்கம் ஏற்பட்ட பின்னரும், இந்த ஒற்றுமையை, சமுதாய நலனை, இணக்கத்தை விரும்பாதோரும் ஊரில் இருக்கக் கூடும். எதிரிகளாகப் பார்க்கப்படத் தேவையில்லாத அளவுக்கு உதிரிகளே அவர்கள் என்பதால் ஊர் நலனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது இன்ஷா அல்லாஹ். 
 
இறைதிருப்தியையே நோக்கமாகக் கொண்டு ஊர்நலனை முன்னிட்டு இணைந்த இதயங்களை தான்மை(Ego)யும், அகங்காரமும், அவதூறுகளும் என்ன தான் செய்துவிட முடியும்?
 
எந்நேரத்திலும் முளைக்கும் வல்லமையுள்ள மரணத்தின் மாயக்கரம் கலைத்துப்போடும் பெருங்கனவே,  அதிலும் தன்னையே மையமாகக் கொண்டு ஆடும் மாயைதான் இந்த வாழ்க்கை என்பது புரிந்துவிடும்போது குதர்க்கங்களும், குழப்பங்களும், குற்றங்காணும் மனப்போக்குகளும் குப்புறத் தள்ளப்பட்டு விடும் என்பதையே குறிப்பிட வேண்டியதாகிறது.
 
ஊர்நலன் கருதி இணைந்த உயர்ந்த உள்ளங்களை உங்கள் MYPNO உளமாற வாழ்த்துகிறது.
 
மதிப்பிற்குரியவர்களே!
 
உங்களின் இந்த இதய இணைப்பால், உள்ளப் பிணைப்பால், நமதூரும், சமுதாயமும் அழகிய நற்பலன்களை அறுவடை செய்ய அல்லாஹ் அருள்வானாக.
 
நன்றி,mypno.com

0 கருத்துகள்: