ஹம்துன் அஷ்ரப்

21 ஜன., 2009

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஜனவரி 21, 2009 No comments

அமெரிக்காவின் 44வது அதிபராக பாரக் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இதையொட்டி வாஷிங்டன் நகரில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது. கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரத்தை வடித்துள்ளார். அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் துணை அதிபர் ஜோ பிடேன், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். பதவியேற்பு விழாவின் முக்கிய அம்சமாக கேபிடல் ஹில்லில் இருந்து வெள்ளை மாளிகை வரை கண்கவர் பாரம்பரிய அணிவகுப்பு நடைபெறும்.அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் இப்பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஏறத்தாழ US$ 300 கோடிகளை பதவியேற்பு விழாவுக்காக மட்டும் இறைத்துள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவுடன் அவரது புதிய அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஒபாமாவின் பதவியேற்பைக் காண தலைநகர் வாஷிங்டனில் மக்கள் குவிந்துள்ளனர். பதவியேற்பு விழா தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்று இரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, ''பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் சவாலானவை. அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக வேண்டும்.இந்தச் சவால்களைச் சமாளிக்க ஒரு மாதம் ஆகலாம்; அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகள் கூட ஏற்படலாம்'' என்றார்.பதவியேற்ற பின் 21ஆம் திகதி தேசிய பிரார்த்தனை சேவை என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 6 மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஜோர்ஜ் வாஷிங்டன் அதிபர் பதவியேற்றபோது தொடங்கப்பட்ட வழிபாட்டு முறைதான் இந்த தேசிய பிரார்த்தனை. அன்று முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கும் அடுத்த நாள் இந்தத் தேசிய பிரார்த்தனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வாஷிங்டனில் உள்ள நேஷனல் கதீட்ரலில் இந்தப் பிரார்த்தனை நடைபெறும்.பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் மேற்கொள்வர்.

நன்றி:http://www.mrishan.blogspot.com/

0 கருத்துகள்: