சிதம்பரம் நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக இருந்த நடராஜன் சென்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து சிதம்பரத்திற்கு புதிய ஏ.எஸ்.பி.,யாக துரை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தர்மபுரியைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் பயிற்சி முடித்துவிட்டு வந்துள்ளார். ஐ.பி.எஸ்., முடித்துள்ள இவர் எம்.எஸ்சி., விவசாயம் படித்து அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
சிதம்பரத்தில் பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., துரை நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் நகரமான சிதம்பரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றம் சம்பவங்கள் எதுவும் இல்லாத அமைதியான நகரமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைப்பிலும் தனி கவனம் செலுத்தப்படும். நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு ஏ.எஸ்.பி., துரை கூறினார்.
நன்றி,தினமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக