ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.
நன்றி; இந்நேரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக