ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

8 ஜன., 2011

''மருத்துவக் கல்லூரி'' : சந்தேகங்களுக்கு விடை ..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜனவரி 08, 2011 No comments

அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,,
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மருத்துவக்கல்லூரி சம்பந்தமாக சகோதரர் கவுஸ் அவர்களின் பார்வேடு செய்தியை பார்த்தோம். இது விஷயமாக நாங்கள் அறிந்த, சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களிடம் கேட்டுத்தெரிந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்
.
இந்த கல்லூரிக்கு தேவையான 50 ஏக்கர் நிலத்தில் 30 ஏக்கர் மிஸ்பாஹுல் ஹுதா மதரஸா, நீடுர். அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வக்ப் அனுமதியுடன் இந்த கல்லூரி மதரஸாவிற்கு சொந்தமானதும் அல்ல. வக்ப்க்கு சொந்தமானதும் அல்ல. முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள். தற்போது நிலுவையில் உள்ள டிரஸ்டிகளின் விவரங்களை சொல்வதென்றால் நீடுர் மதரஸாவின் தலைவர், வக்ப் போர்டு சேர்மன், அஞ்சுமன் டிரஸ்ட் (பங்களிப்பு ஐந்து கோடி) எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி (பங்களிப்பு ஐந்து கோடி) நியு காலேஜ்(பங்களிப்பு ஐந்து கோடி) ஆர்காடு நவாப் (பங்களிப்பு ஐந்து கோடி)  மேற்படி நண்பர்கள் உத்தேச டிரஸ்டிகளாக அறிவிக்கப்பட உள்ளார்கள். மிகுதியுள்ள டிரஸ்டிகள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்களால் (பங்குதாரர்கள் மட்டும்) தேர்தெடுக்கப்பட உள்ளார்கள். தமிழகம் முழுவதும இதுவரை நடந்த கலந்தாய்வு கூட்டங்கள் அனைத்தையும் வக்ப் சேர்மன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி உள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் வரும் 17-1-2011 அன்று சிதம்பரம் பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம், சிதம்பரம் பைசல் மஹாலில் நடைபெற உள்ளது. அவ்வமயம் சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தரப்படும் என்று கவிக்கோ அவர்கள் கூறியுள்ளார்கள்.
எஸ்கொயர் சாதிக், இஸ்மாயில் நாஜி மற்ற ஒருவர் ஆக மூவரும் தற்காலிக தகவல் தொடர்பாளர்களாக இருப்பது உண்மைதான். இவர்கள் யாரும் தன்னிச்சையாக செயல்படவில்லை. மருத்துவக்கல்லூரி சம்பந்தமான முதல் கலந்தாய்வு கூட்டம் நீடுரில் நடைப்பெற்ற போது மேற்படி மூவரும் நியமிக்கப்பட்டார்கள். மேற்படி நபர்கள் மீதான அவதூறு செய்திகளுக்கு அவர்களின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
தற்போது எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு எங்களால் இயன்ற பதிலை தருகிறோம். மற்ற சந்தேகங்களுக்கு வக்ப்வாரியம்தான் பதிலளிக்க வேண்டும். வக்ப் வாரியம் பதில் தந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். அது பற்றிய விவரங்கள் பெறப்பட்டு குழுமத்தில் வெளியிடப்படும்.

பல கோடிகளுக்கு யார் பொறுப்பு என்கிற கேள்விகளுக்கு பல கோடிகளை கொடுப்பவர்கள்தான் பொறுப்பாக உள்ளார்கள். காரணம் பங்குதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு பொறுப்பில் உள்ளார்கள். உதாரணத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து ஆட்சிமன்ற குழுவரை.
கல்லூரி அங்கீகாரம பற்றிய கேள்வி சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி இருக்கும் போது அருகில் உள்ள நீடுருக்கு அனுமதி தருவார்களா என்கிற கேள்வி பற்றி.
புதுச்சேரியை பாருங்கள். ஐந்து கிலோமிட்டர் இடைவெளிக்குள் இரண்டு மருத்துவக்கல்லூரிகள். (மகாத்மா காந்தி, அறுபடைவீடு) மேலும் ஜிப்மர், ராஜீவ்காந்த, பிம்ப்ஸ், மகாத்மாகாந்தி, அறுபடைவீடு, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா இன்னும் சில மருத்துக்கல்லூரிகள் உள்ளது. எனவே, அங்கீகாரம் ஒரு பிரச்சனை அல்ல.
முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முன்னால் மருத்துவ பல்கலைகழக வேந்தர்கள, என்று தொழில்நுட்ப கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்கள். எனவே, இடர்பாடுகள் பற்றி அவர்கள் மிக நன்றாகவே அறிந்துள்ளார்கள். இடர்பாடுகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அவர்கள் அறிந்தவர்கள்தான்.

ஐந்து வருடத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை யார் வைத்துக்கொள்வதென்று ஒரு கேள்வி எந்த பங்குதாரரிடமிருந்தும் ஒரே செக்கில் பத்து லட்சம் தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. முதலில் மருத்துவமனை கட்ட வேண்டும் அதற்கான தொகை மதிப்பீட்டின்படி பங்குதாரர்களிமிருந்து பகுதி பகுதியாக உதாரணத்திற்கு ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ தேவைக்கேட்ப பெறப்போகிறார்கள். மேலும் மருத்துவக்கல்லூரி டிரஸ்டின் பெயரிலேயே வங்கி கணக்கு துவக்கப்பட்டு கணக்கு பராமரிக்கப்படும். எனவே, இது குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். பயப்படவேண்டாம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
மேற்கொண்டு விவரங்களை இன்ஷா அல்லாஹ் வரும் 17-ம் தேதி நடைபெறவிருக்கும் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு குழும சகோதரர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

கலந்தாய்வு கூட்டம் என்றால் என்ன? நமது சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றுக் கொள்வதுதான். தமிழகம் முழுக்க இதுவரை ஆறு கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கான அழைப்பு பொது அழைப்பாக விடப்படுகிறது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்கள் சந்தேகங்களை எழுப்புவதுதான் நியாயமானது, ஆக்கப்புர்வமானது. அதை விட்டு விட்டு தேவையற்ற முறையில் சந்தேகங்களை எழுப்புவது எந்த வகையில் நியாயம்? தானும் செய்வதில்லை, செய்பவர்களையும் குறை கூறிக்கொண்டிருப்போம் என்கிற இந்த சமுதாய இழிநிலை என்றுமாறுமோ? தெரியவில்லை. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.
                      வஸ்ஸலாம.
                                             அன்புடன்
                                                       இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
                                                                 பரங்கிப்பேட்டை

நன்றி;குழுமம்

pnoislamicjamaath

6 ஜன., 2011

ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஜனவரி 06, 2011 No comments

உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று சிறுத்தைப் புலியொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் அளிக்க, விரைந்து வந்தது காவல்துறை. அதன்பின் பொதுமக்கள், காவலர்கள் துப்பாக்கியை எடுத்தது கண்டனர்; சிறுத்தை வீழ்ந்தது கேட்டனர் என்பதாக சிறுத்தைப் புலி வீழ்த்தப்பட்ட செய்தி (படம் காண்க) அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். 
அண்மையில் அந்த வேங்கையை அருகிலிருந்து கண்ட ஒரு வங்காளத் தொழிலாளி அளித்த தகவல்படி அவருடைய குடியிருப்புக்கு அருகில் தான் அந்தச் சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்த வீட்டில் மேலும் இரு குட்டிச்சிறுத்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.    
மேலும் கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து......  சிறுத்தை வீழ்த்தப்பட்ட தகவலறிந்ததும் விரைந்து வந்த அதன் உரிமையாளர் அந்தப் 'பூனைகளின் பெரியண்ணனை' மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறாராம். இதற்கிடையில் வீட்டுவிலங்குகள் கூட வீதியில் வருவதற்குத் தடை இருக்கும் ரியாத்தில் வனவிலங்கொன்றை மனம்போனபோக்கில் செல்ல விட்ட உரிமையாளரை காவல்துறை 'வலை'வீசி தேடி வருகிறதாம்.
நன்றி;http://www.inneram.com

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 06, 2011 No comments

மர்ஹூம் சுல்தான்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும் S.கவுஸ் ஹமீது, ராயல் தெரு S.செய்யது மரைக்காயர் ஆகியோர்களின் மூத்த சகோதரரும், G.ஷேக் மரைக்காயர், ராயல் தெரு S.ரஜ்ஜாக் மரைக்காயர் ஆகியோர்களின் பெரிய தகப்பனாருமான S.முஹம்மதுஅப்துல்காதர் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3.30 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

4 ஜன., 2011

மானிய விலையில் வெங்காயம் - இலவசமாகத் தக்காளி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜனவரி 04, 2011 No comments

னி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் கால் கிலோ வெங்காயம் மானிய விலையிலும் பண்டிகைக் காலங்களில் கால் கிலோ  தக்காளி இலவசமாகவும் வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. உயர்ந்து வரும் காய்கறிகளின் தாறுமாறான விலை அப்படி நினைக்கத் தூண்டுகிறது.

கடந்த மாதம் ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகி சந்தைக்கு வரத்துக் குறையவே வெங்காய விலை விண்ணை முட்டியது. அரசும் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தும் விலைக் குறைப்புக்கு முயன்றது. அரசால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அடுத்த நாளிலேயே மார்க்கட்டில் வெங்காயத்தின் விலை 80 சதம் அளவுக்கு அதாவது கிலோ 20 ரூபாய்க்கு இறங்கி தொடர்ந்த நாட்களில் மீண்டும் பழையபடி சிகரத்தை எட்டியது. ஏற்றுமதிக்குத் தடையும் இறக்குமதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்ட நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காயம் உடனடியாக மார்க்கட்டிற்கு ஒரே நேரத்தில் வந்ததன் விளைவுதான் இது என காரணம் கூறப்பட்டது. ஸ்டாக் தீர்ந்து விட்ட நிலையில் மீண்டும் வெங்காயத்தின் விலை ரூ 100 ஐக்கடக்கும் நிலையிலேயே தற்போது உள்ளது. வெங்காய விலை விண்ணை முட்டிய நிலையில் தக்காளியும் நான் என்ன சாமானியனா என்று கேட்கும் அளவுக்கு வரலாறு காணாத விலையேற்றம்  கண்டது.

காய்கறிகளின் கடுமையான விலை உயர்வு கண்டு அரசு எந்த வித மாற்றுத் திட்டங்களையும் செயல்படுத்த முனைவதாக இல்லை. இயற்கைச் சீற்றங்களினால் அல்லல் படும் விவசாயிகளின் துயர் துடைக்க அரசு எந்த வித முன்னேற்பாட்டையும் கையாளவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணைக்கு அரசு மானியம் வழங்குவது போலக் காய்கறிகளுக்கும் மானியம் வழங்க வேண்டிய நிலை வரலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, விவசாயத்துக்காக வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாத நிலையில் இரு விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ள விவசாயிகள் குறித்துக் கவலை கொள்ளாத மகாராஷ்டிரா அரசு பணம் கொழிக்கும் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு வரி விலக்கு அளித்துச் செல்வந்தர்களைத் திருப்திப் படுத்தி வருகிறது.

அணு உலை முதலீட்டில் பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக அணு உலை விபத்துக் காப்பீடு என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தைச் செலவு செய்யத் திட்டம் தீட்டும் மத்திய அரசு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் பட்டினியாலும் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை.

இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு இயற்கைச்  சீற்றங்களினால் நஷ்டப் படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீடு போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முன்வருவதோடு, மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக  வட்டியின்றி கடன் வழங்குவது போன்று விவசாயிகளுக்கும் வட்டியில்லா கடன் வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் மானிய விலையிலும் பண்டிகைக் காலங்களில் இலவசமாகவும் தக்காளியையும் வெங்காயத்தையும் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் அரசுக்கு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.
நன்றி;

3 ஜன., 2011

திரிஷா நாய் குட்டிக்கு அறுவை சிகிச்சை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 03, 2011 No comments


திரிஷா நாய் குட்டிக்கு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடந்தது. இது பற்றி திரிஷா சொல்கிறார். நான் செல்லமாக வளர்த்து வரும் ஜொயா நாய் குட்டிக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நான் கவலையாக இருந்தேன்.
புத்தாண்டும் சந்தோஷம் இல்லாமலேயே கழிந்தது. பார்ட்டி, விருந்து எதற்கும் போகவில்லை. நாய் குட்டிக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத் துவர்கள் கூறினார்கள். அறுவை சிகிச்சை நடந்த போது அது பட்ட வேதனையை நினைத்து இரவு தூங்கவே இல்லை.
நான் சூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போதெல் லாம் அந்த நாய்க்குட்டி என்னையே சுற்றி சுற்றி வரும். எனது கால்களை நக்கும். தூக்கி கொஞ்சினால் தான் அமைதியாக இருக் கும். மனிதர்களை விட நாய் விசுவாச மிக்கது என்பதை அந்த நாய் குட்டி மூலம் தான் உணர்ந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பின் குறிப்பு:
நாட்டிலே எவ்வளவோ செய்திகள் இருக்கும் போது ஒரு முன்னணி நாளேடு இதையும் செய்தியாக்கி இருப்பது சற்று நெருடலான விஷயம் தான்

2 ஜன., 2011

தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஜனவரி 02, 2011 No comments

பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம் குமாரப்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம்,கிள்ளை ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மாலை பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது. 



 MGR இளைஞர் அணி நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், தான் பேரூராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த போது செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார், தொடர்ந்து பேசுகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் குறிப்பிட்டார்.  கூட்டத்தில் இராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தலைமைக்கழக பேச்சாளர் கோ.ஜெயவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் மலை.மோகன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,ஷாஜஹான், வீராசாமி,இக்பால்,ஜெய்சங்கர், மாரிமுத்து, காமில், சுல்தான்,மாலிமார், யூசுப் அலி,ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் வருகிறது

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜனவரி 02, 2011 No comments


இந்தியாவில் சமீபத்தில் பெய்த பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 
வெங்காயத்துக்கு தேவை அதிகரிப்பதை உணர்ந்த பெரிய வியாபாரிகள் இருப்பு வைத்தனர். இதனால் நாடெங்கும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
 
டெல்லியில், ஒருகிலோ வெங்காயம் 90 ரூபாய் வரை உயர்ந்தது. சென்னையில் இன்று சந்தை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாய்க்கு விற்கிறது. 
 
வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி வெங்காய ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதுதவிர அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் வருகிறது.
 
வரும் 7-ந்தேதிக்கு பல ஆயிரம் டன் வெங்காயம் பாகிஸ்தானில் இருந்து வரும். அதன்பிறகு வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ள தாக தெரியவந்துள்ளது

1 ஜன., 2011

மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 01, 2011 No comments

கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் சென்னை அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப், இணைந்து நடத்தும் மக்தப் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 10, 11 தேதிகளில் பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. முதல் நாளான ஜனவரி 10 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைப்பெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில், உலமா பெருமக்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர், இரண்டாம் நாளான ஜனவரி 11 அன்று காலை 9 மனி முதல் "மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்" நடைப்பெற இருக்கின்றது, இம்முகாமில், மும்பை, பெங்களூரு-உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 400 உலமாக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்

31 டிச., 2010

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments


ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) 

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது. 

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை.
நன்றி;

பெண்ணை கற்பழித்த இஸ்ரேல் முன்னாள் அதிபர்;

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments


இஸ்ரேல் முன்னாள் அதிபர் மொஷே கத்சவ் (65). கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இவர் அதிபராக இருந்தார். அப்போது 2-க்கும் மேற்பட்ட பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், கடந்த 1990-ம் ஆண்டு இவர் மந்திரியாக இருந்தார்.
 
அப்போது தனது பெண் உதவியாளரை மிரட்டியும், தாக்கியும் கற்பழித்ததாகவும் தெரிகிறது.  இந்த குற்றச்சாட்டுகளுக்காக கத்சவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல் அவிவ் நகரில் உள்ள மாவட்டக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கத்சவ் மீதான கற்பழிப்பு புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
 
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இஸ்ரேலில் கற்பழிப்பு குற்றத்துக்கு 4 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஆனால் கத்சவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. துக்க நாள் கற்பழிப்பு வழக்கு நிரூபிக் கப்பட்ட முன்னாள் அதிபர் மீது தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதயாகு கருத்து தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரே லுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் இது ஒரு துக்க நாளாகும் என கூறியுள்ளார். இதற்கிடையே, மாவட்ட கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளதாக கத்சவின் வக்கீல்கள் தெரிவித்துள்ள னர்

அமைச்சருக்கு நன்றி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மருத்துவர்களை நியமித்தமைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்

காசோலையை தொலைத்த வங்கி.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரி முகமது சத்ருதீன். திண்டுக்கல்லைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், வணிகம் தொடர்பாக முகமது சத்ருதீனுக்கு, 6-8-2008 தேதியிட்ட ரூ. 80 ஆயிரத்துக்குக் காசோலை (திண்டுக்கல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா காசோலை) வழங்கினார். அதை சத்ருதீன் 4-12-2008-ல் பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.

வழக்கமாக 7 முதல் 10 தினங்களில் காசோலைகள், கலெக்ஷனுக்குச் சென்று, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் சத்ருதீன் தொடர்ந்து வங்கிக்குச் சென்று விசாரித்தும், அந்த காசலைக்கான பணம் அவரது கணக்குக்கு வந்து சேரவில்லை. பணம் இல்லாததால் சத்ருதீனுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலையும், பலரிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
 
இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் மூலமாக, விவரம் கேட்டு பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கிக்குக் கடிதம் அனுப்பியும், வங்கியில் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. எனவே நுகர்வோர் நீதிமன்றத்தில் சத்ருதீன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்தனர்.

 பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி, சத்ருதீனின் காசோலையை திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பியதாகவும், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கி 9-12-2009 அன்று தமக்குக் கிடைத்த கவரில் கடிதமோ, காசோலையோ இல்லை என்று தெரிவித்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு கூறப்பட்டது.

 காசோலை விஷயத்தில் பண்ருட்டி பாரத ஸ்டேடே வங்கி எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காதது சேவைக் குறைபாடு ஆகும். எனவே பாதிக்கப்பட்ட சத்ருதீனுக்கு பண்ருட்டி பாரத ஸ்ட்டேட் வங்கி நஷ்டஈடாக ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று, நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 தொலைந்து போன காசோலையைக் கண்டுபிடிக்க, பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக 2 மாதத்தில் சத்ருதீனுக்கு பதில் அளிக்க வேண்டும், அப்படி வங்கி செய்யத் தவறினால், சட்டப்படி வங்கி மீது சத்ருதீன் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சத்ருதீன் சார்பில், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவைப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்

மருத்துவர்கள் தேவை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே -க்கு எதிரான சுவரொட்டி, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரி சுவரொட்டி போன்றவற்றினை அவ்வப்போது வெளியிட்டு வந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.அருள் முருகன், இம்முறை தனது சக பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜனுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணி குறித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளார்.

படக் கருவியும் படைக் கலனே!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

த்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே.  அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில்   வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின்  மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!

மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல;  மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின்  அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது.  ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர்.  1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா  நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன்.  குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து  நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய்.  “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்”  தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார்.  தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”
தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய்.  “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!
விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.

“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது”  என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.
இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!
கட்டுரை: இப்னு ஹம்துன்
நன்றி;
http://www.satyamargam.com

29 டிச., 2010

ஜனவரி 10ல் வாக்காளர் இறுதிப் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 29, 2010 No comments




வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
1.1.2011ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம் 25.10.2010 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம், 2011ன் இறுதிப் பட்டியல்கள் 05.01.2011 அன்று வெளியிடப்படுவதாக இருந்தன.
எனினும், சமீபத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்திய தேர்தல் ஆணையம் இறுதிப்பட்டியல்கள் வெளியிடும் தேதியினை தற்போது மாற்றியமைத்துள்ளது. இறுதிப் பட்டியல்கள் 10.01.2011 அன்று வெளியிடப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது