தலித் இனக் குழந்தையொன்றை பொலிஸார் தாக்கி சித்திரவதை செய்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து உத்தரபிதேச மாநிலம் முழுவதும் அச்சம்பவத்துக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா,உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா, ஜஸ்வந்த்பூரில் உள்ள லோகமண்டி எனும் வணிகச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தன்னிடம் வைத்திருந்த 280 ரூபா பணத்தை சந்தைக்கு வந்திருந்த தலித் இனத்தைச் சேர்ந்த கோமள் என்ற 6 வயதுக் குழந்தை திருடிவிட்டதாக ஒருவரால் பொலிஸில் புகார்செய்யப்பட்டது. இதையடுத்து மேற்படி சந்தைப்பகுதிக்கு வந்த பொலிஸார் குறித்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தினர்.இதன்போது ஷியாம்லால் யாதவ் என்ற உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அச்சிறுமியின் இரண்டு காதுகளையும் பிடித்து உயரத் தூக்கியதோடு தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து உயரத்தூக்கி அச்சிறுமியை உலுக்கியது பார்ப்போரின் இதயங்களை வேதனையில் ஆழ்த்திய போதும் பொலிஸுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.இருந்தபோதிலும் இந்தக் கோரக் காட்சி ஒருவரால் ரகசியமாக கைத்தொலைபேசி மூலம் பதிவுசெய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அச்சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய உதவி பொலிஸ் அதிகாரியை மாநில காவல்துறைத் தலைவர் பணிநீக்கம் செய்துள்ளார்.
நன்றி:http://www.mrishan.blogspot.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக