சிதம்பரம் : சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சென்னை தேர்தல் ஆணையம் மற்றும் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் நேரிடையாக கண்காணிக்க "வெப் கேமரா' பொருத்தப்பட்டது. சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி கட்டடத்தைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காலை 6 மணி முதல் 2 மணி வரை மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என சுழற்சி முறையில் போலீசார் மூன்று ஷிப்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு டி.எஸ்.பி., சுழற்சி முறையில் 24 மணி நேரம் அங்கு பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நான்கு இன்ஸ்பெக்டர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 70 போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பெட்டிகள் உள்ள அறையைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொகுதிக்கு ஒரு தாசில்தார் தலைமையில் அதிகாரிகள், வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை ஒவ்வொகு தொகுதி ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் முகப்பு மற்றும் நுழைவாயில் என தலா இரண்டு இடங்களில் "வெப் கேமரா' பொருத்தப்பட்டது. சென்னை தேர்தல் ஆணையம், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேரடி கண்காணிப்பிற்காகவும், வீடியோ பதிவிற்காகவும் இந்த கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேற்று வேட்பாளர்கள் மா.கம்யூ., பாலகிருஷ்ணன், பா.ஜ., கண்ணன், அ.தி.மு.க., செல்வி ராமஜெயம், முருகுமாறன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் இந்துமதி, கல்யாணம், கேசவமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
source: dinamalar
0 கருத்துகள்:
கருத்துரையிடுக