சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது வேப்பநத்தம் கிராமம். இங்குள்ள பொன்னொளி நகரில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். நேற்று அதிகாலை இந்த கிராம மக்கள் வழக்கம்போல எழுந்து தங்கள் காலைப்பணிகளை தொடங்கினார்கள்.
காலை 6.15 மணிக்கு அங்கு திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட சில நொடிகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக பீதி நிலவியது. வீட்டிற்குள் இருந்த நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வெளியே ஓடிச்சென்று மிரட்சியுடன் காணப்பட்டன.
இந்த அதிர்வை உணர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு ஓடி வந்தார்கள்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், தங்கள் உடலில் அந்த பூமி அதிர்வை உணர்ந்ததாகவும், 10 நொடிகளுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்தனர். மேலும் சிலர் நடந்த சம்பவத்தில் இருந்து மீளமுடியாமல் திகைத்து நின்றனர். இதேபோல அருகில் உள்ள ஊனத்தூர், சிறுவாச்சூர், அண்ணாநகர், கல்லாநத்தம், அன்புநகர் ஆகிய கிராமங்களிலும் பூமி அதிர்ச்சியை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சேலம் வானிலை ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்று விசாரணை நடத்தினார்கள்.
விழுப்புரம், சேலம் மாவட்டத்தின் எல்லையாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 800 அடி உயர்ந்துள்ள இம்மலையில் விழுப்புரம் மாவட்ட பகுதியில் 171 பெரிய, சிறிய மலை கிராமங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை 6.20 மணியளவில் 25 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இடி முழங்கிய சத்தத்துடன் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கின. வீட்டின் மேற்கூரை, அலமாரியில் வைத்திருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. சில வீடுகளில் சமையல் பாத்திரங்கள் கீழே விழுந்து சத்தம் உண்டானது.
நில அதிர்வை உணர்ந்த மலைவாழ் மக்கள், குழந்தைகளையும், உடமைகளையும் தூக்கிக்கொண்டு அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதற்குள் நில நடுக்கம் பீதி கிராமங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதி அடங்கிய பிறகே கிராம மக்கள் வீட்டுக்குள் சென்றனர்.
நில அதிர்வால் சுண்டகப்பாடியில் ஒரு கூரை வீட்டின் சுவரிலும், கொடுந்துறை கிராமத்தில் உள்ள நூலக கட்டிடத்தின் சுவரிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. மற்றபடி பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து சேலம் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
தென் கிழக்கு ஈரான் நாட்டில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. அந்த பதிவுதான் இங்குள்ள சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகி உள்ளது. மற்றபடி சேலம் மாவட்டத்திலோ, சேலத்திலோ நில நடுக்கம் ஏற்பட்டதாக கருவியில் பதிவாகவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக