பூ வாசத்தையும் ஊதுபத்தி வாசத்தையும் எப்போதாவது துர்நாற்றமாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் இழவு வீட்டுக்கு சென்றிருப்பீர்கள். எனக்கு பிடித்த அத்தை ஒருவர், Bank Employee, பாத்ரூம் சென்றபோது Pressure அதிகமாகி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடைசியில் அநியாயமாக இறந்து போனார். அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நான்கெழுத்து மருத்துவமனை. ஈரோடு கிளை. ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா வழி மாமா ஒருவருக்கு நெஞ்சு வலி வந்தது. இது பிரபலமான மருத்துவமனை என்பதால் கொண்டுபோய் சேர்த்தார்கள். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டது என்றார்கள், ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள், ஊசி போட வேணும் என்றார்கள்.. (ஒரு ஊசியின் விலை 25,000.) இன்னும் பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்றார்கள்... சில டெஸ்ட்டுகள் எடுத்தார்கள்.. நிலைமை சீரியஸ் என்றார்கள்... ஸ்பெஷலிஸ்டுகள் வரவேண்டும் என்றார்கள்... என்னென்ன கதை அடிக்க முடியுமோ அத்தனையும் அடித்தார்கள்.
பார்த்தார் அவர் மகன்! இங்கே ஆகும் செலவை தாக்குபிடிக்க முடியாது என்று சென்னைக்கு கூட்டி செல்ல முடிவெடுத்தார். (ஒரு முன்னணி தனியார் தொலைகாட்சியில் கேமரா மேனாக மாமா மகன் இருப்பதால், சென்னை அரசு மருத்துவமனையில் ஏதோ concession உண்டாம்.) அப்போது பார்க்க வேண்டுமே... இந்த மருத்துவமனை ஊழியர்களின் அடாவடியை. மாமாவை விடவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் கூட நெகிழ்ந்து போனேன். பேஷன்ட் மேல் இவ்வளவு பாசமா என்று. ஆனால், மாமா மகன் 'வச்சுகோங்க. ஆனா காசு ஒரு பைசா கூட தர மாட்டோம்' என்று சொன்னதும் தான் விட்டார்கள். (வடை போச்சே...) பின்னர் சென்னைக்கு கூடி வந்து பரிசோதித்ததில் தான் தெரிந்தது அது வெறும் வாயு தொந்தரவு என்று.
இன்னுமொரு உதாரணம்... எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் 93 வயதான தந்தையும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், அவசரத்திற்கு என்று அதே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்பாவின் நண்பர் தைரியசாலி, வர்மக்கலை அறிந்தவர், மருத்துவ முறைகளையும் ஓரளவு அறிந்தவர் (மருத்துவம் அல்ல). இந்த முறை நடந்த கூத்து இன்னும் அருமை. முதலில் வைத்தியம் செய்த மருத்துவர் எதற்கோ லீவ் எடுக்க, மருத்துவமனையில் பேஷண்டுக்கு வைத்தியத்தை தொடர வந்தவர் ஒரு கிட்னி specialist. என்னடா இது கேனத்தனமா இருக்கே என்று நண்பர் கேட்க, என்னென்னமோ சமாளித்திருக்கிறார்கள். இவர் நோண்டிநோண்டி கேட்கவும் 'பார்ட்டி தெளிவாக இருக்கிறார் என்று விட்டு விட்டார்கள்'. அதன் பிறகும் ஏனோதானோவென்ற வைத்தியம் தொடர்ந்திருக்கிறது. நண்பர் அங்கிருந்து எப்படியோ வெளியே வந்து வேறு டாக்டரிடம் காட்டி சரிசெய்திருக்கிறார்கள்.
தீபாவளியன்று கீழே விழுந்த அத்தையை, அன்று வேறு மருத்துவமனைகள் விடுப்பாக இருந்த காரணத்தினால் மேற்கூறிய பெருமை வாய்ந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். விலைஏற்றத்தால் இந்த முறை ஊசி விலை 45000 . இருப்பினும் கொடுத்தார்கள். வேலைக்காகவில்லை. அத்தை எங்களை விட்டு போய்விட்டார்.
அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது? ஒரு முட்டாள் சொல்லி இருப்பான். ஒரு லட்சம் முட்டாள்கள் அதை follow செய்கிறார்கள்.
இனியாவது கௌரவத்துக்காக செலவு செய்யாமல், ஒரு மருத்துவமனையில் சேர்க்கும்
முன், ஏற்கனவே அந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவத்தை கேட்டு விட்டு சேருங்கள். ஏனென்றால், தவறான தேர்ந்தெடுப்பால் வீணாவது பணம் மட்டும் அல்ல, உயிரும் கூட தான்....
(பிரிவின் வேதனையில் இருப்பதால், இந்த பதிவில் கொஞ்சம் தெளிவு இல்லை தான். மன்னியுங்கள் நண்பர்களே)
நன்றி
http://sadharanamanaval.blogspot.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக