திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. குளிரில் இருந்து தப்பிக்க கொடைக்கானல்
வாசிகள் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். அவ்வாறு குளிர்காய்ந்த ஒரு குடும்பமே பரிதாபமாக இறந்துள்ளனர்.
கொடைக்கானல்- மதுரை ரோட்டை சேர்ந்தவர் சேவியர். சுற்றுலா வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி (வயது35) மகன் வேளாங்கண்ணி பிரிட்டோ (14), மகள் சலேத் நான்சி (13) ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். மாலையில் கடுமையான குளிர் நிலவியதால் வீட்டுக்குள் குளிர்காய தீ மூட்டிய தாக தெரிகிறது. பின்னர் தாய்-2 குழந்தைகள் தூங்கி விட்டனர். இன்று அதிகாலை 2 மணிக்கு பணி முடிந்து சேவியர் வீட்டுக்கு சென்றார்.
வீட்டின் கதவை தட்டினார். திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த சேவியர் ஜன்னலை உடைத்து பார்த்தார். அப்போது 3 பேரும் படுத்திருந்தது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆரோக்கிய செல்வி மற்றும் குழந்தைகள் பிரிட்டோ, சலேத்நான்சி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பூட்டிய வீட்டுக்குள் குளிர்காய போடப்பட்ட நெருப்பில் ஏற்பட்ட புகை மண்டலத்தில் மூச்சுதிணறி 3 பேரும் பலியானது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான வேளாங்கண்ணி பிரிட்டோ 9-ம் வகுப்பும், சலேத் நான்சி 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். குளிர்காய வைத்த நெருப்பே எமனாகி 3 பேரின் உயிரை பறித்த இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக