இந்திய நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகங்களில் முதன்மையாக உள்ள முஸ்லிம் சமூகம் தனது பின்தங்கிய நிலையிலிருந்து மாறி முன்னேற்றம் காண வேண்டுமானால் அடிப்படையாகச் செய்ய வேண்டிய வேலை, அந்த சமூகத்தின் இளைய தலைமுறைக்கு அறிவு எனும் மனிதனை மேம்படுத்தும் ஆற்றலை முழுமையாக கொடுப்பதுதான். அதுவும் இஸ்லாம் காட்டிய வழியில் கொடுப்பதுதான். அது ஒன்றுதான் முஸ்லிம் சமுதாயத்தின் துயர் துடைக்கும் பேராற்றலைக் கொண்டிருக்கிறது. அது ஒன்றுதான் முஸ்லிம்களின் முதல் மற்றும் இறுதி இலட்சியமான மறுமை வெற்றியை உறுதியாக்குகிறது. இந்தக் கருத்தை தமிழகத்தில் உள்ள எவரும் மறுக்கமாட்டார்கள். எந்த அமைப்புக்கும் இயக்கத்திற்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
கடந்த 10 ஆண்டுகாலமாக தொலைக்காட்சி ஊடகம் மூலம் சிவிழி நிறுவனம் இந்தக் கருத்தை வலியுறுத்தியே முஸ்லிம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகவே தொடங்கப்பட்ட சமூகநீதி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டு காலமாக முஸ்லிம்களிடம் கல்விப் புரட்சி ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காகவே உழைத்து வருகிறது.
இதுவரையிலும் தமிழகத்தின் 31 மாவட்டங்களிலும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், மாணவர்களுடன் கலந்தாலோசனை, பயிற்சி முகாம்கள், இவற்றோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாத இதழ், ஆண்டுதோறும் உயர்கல்வி வழிகாட்டி மலர்கள் என்று எங்களின் சக்திக்கு உட்பட்டு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரமும் இத்தகைய பணிகளில் தான் உழைத்து வருகின்றோம்.
இது அல்லாமல் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடத்திலும் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று அந்ததந்தப் பகுதிகளில் கல்விப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும் எங்களோடு தோளோடு தோள் நின்று உழைத்து வரக்கூடிய சகோதரர்களும் கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தப் பணிகளை இன்னும் வேகமாகவும வீரியமாகவும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் சிறிதளவேனும் நமது சமுதாயத்தில் ஏற்படும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நமது முக்கிய இலக்கும் களப்பணிகளும் :
1. இன்ஷா அல்லாஹ் 2030க்குள் தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை அடியோடு மாற்றப்பட வேண்டும். அல்குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமியக் கலாச்சாரம் இவற்றின் பேணுதலோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியைத் திறனோடு படிக்கும் சமூகமாகவும் மாற்றப்பட வேண்டும்.
2. 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் வாய்ப்புள்ள மதரஸாக்கள் கூடுதலாகத் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றில் நவீன அரபு மொழியும், உயர்ந்த ஆங்கில மொழி அறிவும் திறனோடு கற்றுத் தரப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் தரம் மிகுந்த மதரஸாக்கள் தனியார்களால் வணிக நோக்கோடு முதலீடு செய்யப்பட்டு அதிகம் உருவாக்கப்பட வேண்டும்.
3. கல்வி இடை நிறுத்தம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
4. அரசின் அதிகாரமிக்க துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு அதிகளவு கல்வி நிதியுதவி தாராளமாக செய்யப்பட வேண்டும்.
5. சமூகம் மறுமலர்ச்சி அடைவதற்கு அடிப்படைத் தேவையான பெண்கள் மார்க்க அறிவோடு உயர்கல்வியையும் பெற வேண்டும்.
சமுதாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யும் இத்தகைய பணிகள் விரிவாக தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் பரவலாக செய்யப்பட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். ஒரு ஊரில் ஆண்டிற்கு ஒரு கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதால் மட்டும் எவ்வித பலனும் ஏற்படாது. வழிகாட்டுதலும் ஊக்கப்படுத்துதலும் தொடர் சங்கிலியாய் இளைய தலைமுறைக்கு எந்நேரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
உலகம் போகின்ற வேகத்தோடு முஸ்லிம்களும் முன்னேற வேண்டும். முஸ்லிம்கள் அறிவாற்றலைப் பெற்றால்தான் இஸ்லாமிய மார்க்கத்தை முன்நிலைப்படுத்த முடியும்.
‘இஸ்லாத்தைப் பயின்றதுடன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஒரு சேரப் பயிலுவதே முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்ட கல்வி முறை’
மக்கள் இயக்கமாக மாற்றப்படாத எந்த ஒரு கருத்தியல் கோட்பாடும் வெற்றி பெற்றதாகச் சான்று கிடையாது.
முஸ்லிம்களிடம் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இந்தியச் சமூகத்தில் முன்னேறிய சமூகமாக தமிழ் முஸ்லிம் சமூகம் மிளிர்வதற்கு ஆக்கப்பூர்வமான பணியாக இதைத் தவிர வேறு எதுவும் நம்முன் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் ஒத்த கருத்துடைய, சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள சகோதரர்கள்/சகோதரிகள் அனைவரையும் ஒன்றுபடுத்தி எல்லா மாவட்டங்களிலும் உள்ள சமூகக் கல்வி ஆர்வலர்கள் துணையோடு கல்விப் பணியை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் செய்யலாம் என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது.
இந்த சமூகப் புரட்சிப் பணியில் எங்களோடு இணைந்து பணியாற்ற விரும்பும் சகோதரிகள் அனைவரோடும் இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாத இறுதி வாரத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்தாலோசனை செய்ய உள்ளோம்.
நிலையான அறத்தைப் பெற்றுத் தரும் இந்தப் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
முஸ்லிம்களை பாரம்பர்ய கல்வி முறைக்கு மாற்றுவோம்!
வெள்ளையர்களின் சூழ்ச்சியை வேரறுப்போம்!
இனிவரும் நூற்றாண்டின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றலும் வல்லமையும் இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது என்பதைக் கருத்தால் நிலைநிறுத்துவோம்!
25 நவ., 2010
கல்வி இயக்கமாகச் செயல்படுவோம்…! CMN சலீம்
நன்றி; அதிரைபோஸ்ட்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக