கோவையில் ஒரு கடையில் வேலை செய்து வந்த புஷ்பராஜ், 2007ம் ஆண்டு, அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில்,5 ஆயிரம் செலுத்தி கணக்கு தொடங்கினார். ஏடிஎம் கார்டையும் பெற்றார். ஏடிஎம் கார்டு மூலம் எந்த வங்கியிலும் பணம் எடுக்கலாம். ஒருநாள் ஏடிஎம்மில் 1000 எடுத்தார். பின்னர் ஊட்டியிலும், கோவையிலும் மற்றொரு வங்கியின் ஏடிஎம் மூலம் தலா 1000 எடுத்தார்.
பேலன்ஸ் ரசீதில், அவரது கணக்கில் மீதம் 5 ஆயிரம் இருப்பதாக காட்டியது. பணம் எடுத்த பிறகும், தனது கணக்கில் பணம் குறையாததை கண்ட புஷ்பராஜ் ஆச்சர்யம் அடைந்தார். ‘ரகசியத்தை‘ யாரிடமும் சொல்லவில்லை. 10 ஆயிரம், 20 ஆயிரம் என எடுக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரது கணக்கில் 60 ரூபாய் பேலன்ஸ் இருப்பதாக காட்டியது. ஆனாலும் ஏடிஎம் கார்டை செருகினால் அமுதசுரபியாய் பணம் கொட்டியது. 2007 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மொத்தம்27 லட்சத்தை ஏடிஎம் மூலம் கறந்தார் புஷ்பராஜ்.
ஒரே வங்கியில் இல்லாமல் பல வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்துள்ளதால், முறைகேடாக பணம் பெறுவது முதலில் வங்கிகளுக்கு தெரியவில்லை. லட்சக்கணக்கில் பணம் குறைந்ததால் வங்கி அதிகாரிகள் உஷாராயினர். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் புஷ்பராஜ் வசித்த துடியலூர் முகவரிக்கு சென்றனர். அவர் தலைமறைவாகிவிட்டார். புஷ்பராஜின் முகம் ஏடிஎம் கேமராவில் பதிவாகி இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. புஷ்பராஜின் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்தது. அது நாகர்கோவில் முகவரியில் இருந்தது. அங்கு சென்று விசாரித்தனர். அங்கேயே முகாமிட்டு திருச்செந்தூர் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த புஷ்பராஜை பிடித்து கோவை கொண்டுவந்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகையை கைப்பற்றினர்.
விசாரணையில், தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் ஏடிஎம்மில் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் எடுத்து ஆடம்பரமாக செலவு செய்தது, சென்னைக்கும் மும்பைக்கும் விமானத்தில் பறந்தது, ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது ஆகியவற்றை புஷ்பராஜ் தெரிவித்தார். 3 ஆண்டுகளாக பிடிபடாததால் இனி பயமில்லை என நினைத்தேன். ஆனால் போலீசார் பிடித்துவிட்டனர் என்றார்.
source : www.tamilcnn.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக