தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக உருவாகி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திர கடலோரப் பகுதிக்கு நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இதுவரை கொட்டித் தீர்த்த மழையின் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடலோர மாவட்டங்களில், அதிலும் வட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஒரு வாரமாக மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோ மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. அதன் மையப்புள்ளி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை ஒட்டி இருந்தது. இதனால் இந்த இரு மாவட்டங்கள் மற்றும் அதை ஒடியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஏரி, குளம், நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டன. மேலும் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு: இந்த பாதிப்புகளை நேரில் கண்டறிந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 8 ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். சேத விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தனர்.கடலூர் மாவட்டத்தில்,இம்மாவட்டத்தில் முன்பு கலெக்டராக பணியாற்றிய திரு,ககன்தீப் சிங் பேடி (குடிநீர்வடிகால்வாரியஇயக்குனர்) அவர்களிடம், பொதுமக்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்தனர்.
நேற்று கன்னியாகுமரியில் 50 மிமீ, புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம் 40 மிமீ, செய்யூர், மதுராந்தகம், மாமல்லபுரம், கடலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வானூர், ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, கொள்ளிடம், சீர்காழி 30 மிமீ, தாம்பரம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், மரக்காணம், கும்பகோணம், குடவாசல், முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குளச்சல், நாகர்கோவில் 20 மிமீ மழை பெய்துள்ளது. இதுவரை மழை கொட்டித் தீர்த்த 9 மாவட்டங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.
குறைந்த காற்றழுத்தம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் ஆந்திரா கடலோரத்தில் கனமழை பெய்யும். வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.
தென் மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். 11 மாவட்டங்களில் விடுமுறை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், கரூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முதல்வர் வைத்திலிங்கம் விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக மாவட்ட தலைநகரங்களிலும், இதர பகுதிகளிலும் மக்களின் இயல்பான வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக