ஹம்துன் அஷ்ரப்

28 டிச., 2010

மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 28, 2010 No comments

கடந்த நான்கு வருட காலமாக சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையினால், காஸா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட நோயாளிகள் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என காஸா மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எக்ஸ்ரே கருவிகளுக்குரிய உதிரிப்பாகங்கள் முதலான அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களை அனுமதிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை தடைவிதித்துள்ள காரணத்தினால் சிறுவர், பெண்கள், வயோதிகர் என்ற பாகுபாடின்றி காஸா நோயாளிகள் பெரிதும் துன்புறுவதாகவும், அவசர சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2007 ஜூன் முதல் காஸா கரையோரப் பிராந்தியங்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து போதிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியின்றி காஸா மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகித் துன்புற்றுவருகின்றனர்.
இதேவேளை, 2008 டிஸம்பர் மாதம் காஸா மீதான இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தாக்குதல் இடம்பெற்று சரியாக இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையில், 300 குழந்தைகள் உட்பட 1400 அப்பாவிப் பலஸ்தீனர்களின் உயிர்களைக் காவுகொண்டு, 5000 க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்த துர்ப்பாக்கிய நிகழ்வை நினைவுகூறும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றன.
காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புத் தாக்குதலின் விளைவாக சுமார் 4000 பலஸ்தீன் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நாட்டின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டன. ஏராளமான குழந்தைகளும் பெண்களும் பல்வேறு உளவியல் பாதிப்புகளுக்கு உட்பட்டு இன்றுவரை துன்புற்றுவருகின்றனர். சுமார் மூன்று வாரகாலம் தொடர்ந்த இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தினால் சுமார் 50,000 பலஸ்தீனர்கள் வீடற்ற அகதிகளாய் முகாம்களில் வசித்துவருகின்றனர்.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா. வாக்குறுதியளித்தபடி முறையான மீள்கட்டுமான முயற்சிகள் இன்னுமே முற்றுப்பெறாத நிலையில், பலஸ்தீன் பொதுமக்களின் நாளாந்த சுமுக வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் இன்னுமே ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் தொடரும் இஸ்ரேலிய முற்றுகை குறித்து உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல தொடர்ந்தும் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றமையும் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள், சேவைகளைத் தொடர்ந்து பகிஷ்கரிப்புச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: