ஹம்துன் அஷ்ரப்

31 டிச., 2010

காசோலையை தொலைத்த வங்கி.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரி முகமது சத்ருதீன். திண்டுக்கல்லைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், வணிகம் தொடர்பாக முகமது சத்ருதீனுக்கு, 6-8-2008 தேதியிட்ட ரூ. 80 ஆயிரத்துக்குக் காசோலை (திண்டுக்கல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா காசோலை) வழங்கினார். அதை சத்ருதீன் 4-12-2008-ல் பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.

வழக்கமாக 7 முதல் 10 தினங்களில் காசோலைகள், கலெக்ஷனுக்குச் சென்று, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் சத்ருதீன் தொடர்ந்து வங்கிக்குச் சென்று விசாரித்தும், அந்த காசலைக்கான பணம் அவரது கணக்குக்கு வந்து சேரவில்லை. பணம் இல்லாததால் சத்ருதீனுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலையும், பலரிடம் வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
 
இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன் மூலமாக, விவரம் கேட்டு பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கிக்குக் கடிதம் அனுப்பியும், வங்கியில் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. எனவே நுகர்வோர் நீதிமன்றத்தில் சத்ருதீன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்தனர்.

 பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி, சத்ருதீனின் காசோலையை திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பியதாகவும், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கி 9-12-2009 அன்று தமக்குக் கிடைத்த கவரில் கடிதமோ, காசோலையோ இல்லை என்று தெரிவித்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு கூறப்பட்டது.

 காசோலை விஷயத்தில் பண்ருட்டி பாரத ஸ்டேடே வங்கி எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காதது சேவைக் குறைபாடு ஆகும். எனவே பாதிக்கப்பட்ட சத்ருதீனுக்கு பண்ருட்டி பாரத ஸ்ட்டேட் வங்கி நஷ்டஈடாக ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று, நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 தொலைந்து போன காசோலையைக் கண்டுபிடிக்க, பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக 2 மாதத்தில் சத்ருதீனுக்கு பதில் அளிக்க வேண்டும், அப்படி வங்கி செய்யத் தவறினால், சட்டப்படி வங்கி மீது சத்ருதீன் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சத்ருதீன் சார்பில், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவைப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்

0 கருத்துகள்: